Super Mario Bros: வாழ்நாள் தண்டனை தந்த கேமிங் நிறுவனம் - இது கேமிங்கின் தமிழ் ராக்கர்ஸ் கதை!
"எனது அருமை மூர்த்தி உன்னை நினைக்கும்போது எவ்வளவு சுகமான நினைவுகள்" என்று புதுப்பேட்டைப் படத்தின் இறுதிக் காட்சியில் தனுஷ் கூறுவது போல, "Super Mario Bros" எனும் வீடியோ கேம் 90’ஸ் கீட்ஸின் அத்தனை நாஸ்டாலஜியா நினைவுகளைத் தேக்கி வைத்துள்ளது.
PlayStation, x Box , AR, VR என்று இன்று gaming உலகம் எங்கோ போய்க்கொண்டு இருந்தாலும் சிப் கேமிங்கின் பிதாமகன் 'மரியோ' தான் எனலாம். சொல்லப்போனால் 100000 in 1 என சொல்லி வெறும் 10 கேமினைக் கொடுத்துவிட்டு 1 லட்சம் கேமென ஏமாந்த 90’ஸ் கிட்ஸின் முதல் 'scam'-மும் இதுதான்.
குடுகுடுவென ஓடி வந்து செங்கல்லை மண்டையால் உடைப்பது, காளான் தின்று பெரிதாவது, பூவைப் பிடித்து நெருப்புக் குண்டு போட்டு கொக்கையும் ஆமையையும் போட்டுத்தள்ளுவது என விளையாடும் நம்மையே சூப்பர் ஹீரோவாக மாற்றியிருக்கும் மரியோ.
இந்த விளையாட்டின் நோக்கமே குறிப்பிட்ட நேரத்தில் ராணியைக் கண்டுபிடிப்பதுதான். அதற்குள் அத்தனை தடங்கல்கள் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் பெரிய ஆமையைத் தாண்டிக் கொடியை இறக்கி ஒரு சுற்றினை முடிக்க வேண்டும். அப்படி இறக்கிய பின்னர் ராணியைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று இருக்கும்போது "நன்றி மரியோ, ஆனால் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய ராணி இந்தக் கோட்டையில் இல்லை" என்று அடுத்த சுற்றிற்கு அழைத்துச் சென்றுவிடும். இப்போது இருக்கும் மெமரி கார்டு வசதியோ, 'resume' வசதியோ இல்லாத நாள்களில், ஒரே இடத்தில் உட்கார்ந்து கரண்ட் கட் ஆகிவிடக்கூடாது என்று வேண்டிக்கொண்டு, ஒவ்வொரு லெவலாக தாண்டி ஓடி விளையாடிய நாள்கள் பசுமையானது.
Nintendo என்ற ஜப்பானிய கேமிங் நிறுவனம் உருவாக்கிய இந்த விளையாட்டு இப்போது படமாக வெளியாகியுள்ளது. விமர்சன ரீதியாக பெரிதாகப் போகாவிட்டாலும் அதனுடன் இறங்கிய `ஈவில் டெட் ரைஸ்' படத்தினை வசூலில் அடித்து நொறுக்கியுள்ளது.
இந்த நிண்டெண்டோ வீடியோ கேமிங் கம்யூனிட்டி பெயர் வெளிவரும்போதெல்லாம் கேரி பவுசர் எனும் பெயரும் அடிபட்டுக் கொண்டு இருக்கிறது. இதற்கு பாக்ஸ் ஆபீஸ் வெற்றியாக மாறிய மரியோ திரைப்படத்தின் வெற்றி மட்டும் காரணமில்லை. கேரி பவுசர் மீது நிண்டெண்டோ நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்குத் தொடுத்து சிறையில் அடைத்தது. இப்போது அவர் விடுதலையாகியுள்ளார் அதுவும் காரணமாக இருக்கிறது. யார் அவர், என்ன செய்தார்? இதோ…
கேரி பவுசர், கனடா நாட்டைச் சேர்ந்தவர். இவர் team xecuter எனும் pirated mod சிப்களைத் தயாரித்து, வீடியோ கேம் கன்சோல்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அது பல வீடியோ கேம்களை ஜெயில் பிரேக் எனும் முறை கொண்டு உடைத்து 'Nintendo Switch' என்ற கையடக்க வீடியோ கேமிங்கின் மாதிரியை கம்மியான விலைக்கு விற்றது. சுருக்கமாகச் சொன்னால் கேமிங்கின் தமிழ் ராக்கர்ஸ் போல உலகமெங்கும் செயல்பட்டுள்ளது. மேலும் கேமினைத் தரவிறக்கம் செய்யும் வேலையையும் செய்தது.
நிண்டெண்டோ இதனை கடுமையாக எதிர்த்தது. மிக முக்கியமாக, கேம் டெவலப்பர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் உயிர்வாழ்வதற்காக கேம்களின் முறையான விற்பனையைச் சார்ந்துள்ளனர். பைரசி இவர்களை பாதிக்கிறது என்றது.
அந்நேரத்தில் கேரி பவுசர் உட்பட மூன்று நபர்கள் team xecuter நிறுவனத்தில் இருந்து கைது செய்யப்பட்டனர். அதில் கேரி விசாரணைக்கு உதவியதால் அவரை அதிக சிரமத்துக்கு உள்ளாக்காமல் வழக்கை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றனர். விசாரணையின் முடிவில் 40 மாத சிறைத் தண்டனையும் 10 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறையில் அவரது நன்னடத்தையும் வயதையும் காரணம் காட்டி இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் சில நிபந்தனைகளோடு. அது என்னவென்றால் வெளியில் வந்து அவர் சம்பாதிக்கும் மாத வருமானத்தில் 25-30% நிண்டெண்டோ நிறுவனத்திற்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான். மேலும், சிறையில் சம்பாதித்த 175 டாலரையும் கட்ட வேண்டும் என்பதுதான்.
ஒரு பக்கம், 'இது கடுமையான தண்டனை. 25-30% மாத வாடகைக்கே சென்றுவிடும். குற்றத்தில் சிறு பங்காக இருப்பவருக்கே இவ்வளவு பெரிய தண்டனையா' என்று சொன்னாலும், 'பைரஸி என்பது உழைப்புத் திருட்டு' என்று மறுபக்கம் எதிர்ப்பு வந்துகொண்டிருக்கிறது.
Super Mario Bros படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து அடுத்து பல கேம்களைப் படமாக்கப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரி பவுசரின் கதையோ கரடியிடம் மாட்டிய மரியோவின் கதைபோல ’Game Over’ராக முடிந்துள்ளது.
`Super Mario Bros' விளையாடிய உங்களின் நினைவுகள் குறித்து கமென்ட்டில் சொல்லுங்களேன்.
from விகடன்
No comments