Breaking News

Elon Musk: ட்விட்டரின் லோகோ மற்றும் பெயர் மாற்றமா? எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி என்ன?

உலகின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டரைத் தன் வசப்படுத்தியதிலிருந்து தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.

குறிப்பாக ஊழியர்களின் பணிநீக்கம், ப்ளூ டிக் விவகாரம், போலிக் கணக்குகளின் தடை போன்றவை பேசுபொருளாக மாறி சர்ச்சையைக் கிளப்பின. இதுமட்டுமன்றி, “நான் ட்விட்டர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா?” என்று மக்களிடம் கருத்துக் கணிப்பு ஒன்றையும் எலான் மஸ்க் நடத்தியிருந்தார். இப்படி அடிக்கடி ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டுவரும் எலான் மஸ்க் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ட்விட்டரின் பறவை லோகோவை மாற்றி அதற்குப் பதிலாக டாட்ஜின் (Dodge) லோகோவை வைத்திருந்தார்.

எலான் மஸ்க்

இந்நிலையில் மீண்டும் ட்விட்டர் நிறுவனத்தின் லோகோவை மாற்ற முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட எலான் மஸ்க், ட்விட்டர் லோகோவை மாற்ற உள்ளதாகவும், ட்விட்டர் செயலியில் ஏற்கனவே இருக்கும் லோகோவிற்குப் பதில் எந்த மாதிரியான லோகோவை வைக்கலாம் என்றும் பயனர்களிடமே கருத்துகளைக் கேட்டிருக்கிறார்.

"வெகு விரைவில் ட்விட்டர் என்னும் பிராண்டுக்கு நாம் விடையளிக்க இருக்கிறோம்" என்று பெயர் மாற்றம், லோகோ மாற்றம் குறித்துத் தெரிவித்தவர், "இதனால் அனைத்து பறவைகளுக்கும் விடுமுறை" என ட்விட்டரின் தற்போதைய பறவை லோகோவைக் குறிப்பிட்டுக் கிண்டலாகப் பதிவு செய்துள்ளார்.

அடுத்த ட்வீட்டாக, "ஒரு நல்ல X லோகோ இன்று இரவுக்குள் நீங்கள் பகிர்ந்தால், அதை நாளையே உலகம் முழுவதும் லைவ் செய்துவிடுவோம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டுக்குப் பலரும் தங்களின் லோகோ படைப்புகளை ரிப்ளையாகப் பதிவிட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து 'X' என்பது மட்டும் ஒளிரும் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் பலரும் ட்விட்டரின் பெயரும் லோகோவும் நிச்சயம் மாற்றப்படும் என்று தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் வணிகப் பெயரை 'X Corp' என்று மாற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சாரர், ட்விட்டரின் அடையாளமே அதன் ப்ளூ பறவை லோகோதான். அதை மாற்றுவது முட்டாள்தனம் என்று கூறிவருகின்றனர்.



from விகடன்

No comments