Breaking News

ChatGPT: ஒரு நாளைக்கு 7 மில்லியன் டாலர் இழப்பு; பண நெருக்கடியில் திணறுகிறதா `OPEN AI' நிறுவனம்? 

ChatGPT-யை உருவாக்கிய `Open AI' நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 7 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 5.83 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. 

2015-ல் சாம் ஆல்ட்மேன் என்பவரால், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சி நிறுவனமாகத் தொடங்கப்பட்டதுதான் Open AI. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆதரவால் புத்துணர்வு பெற்ற இந்நிறுவனம், நவம்பர் 2022-ல் ChatGPT மூலம் AI உலகில் முக்கிய பேசுபொருள் ஆனது. குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமடைந்து மொபைல் பயனாளர்கள் தொடங்கி பெரும் முதலாளிகள் வரை அனைவரையும் கவர்ந்தது. AI தொழில்நுட்பங்கள் சில காலமாகவே இருந்துவந்தாலும் ChatGPT அதற்கு புதிய அடையாளம் கொடுத்தது. AI குறித்த பல விவாதங்களைத் தொடங்கி வைத்தது.

ChatGPT

எந்த வித கட்டணமும் இல்லாமல், நாம் கேட்கும் அத்தனை கேள்விகளும் மனிதனைப் போல, சில நேரங்களில் மனிதனையும் மிஞ்சிய துல்லியமான பதில்களைத் தருகிறது ChatGPT. மேலும் அன்றாட வாழ்வில் பல விஷயங்களையும் மிகவும் எளிதாக்கி உள்ளது. இதனாலேயே நன்கொடைகள் மற்றும் லாபநோக்கற்ற, ஆனால் போட்டி மனப்பான்மை கொண்ட முதலீடுகளின் உதவியுடன் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

மைக்ரோசாப்ட் மற்றும் பிற நம்பத்தகுந்த மூலதன நிறுவனங்களிடமிருந்து கணிசமான 10 பில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்ற போதிலும், ChatGPT தொடங்கப்பட்டதிலிருந்து இந்நிறுவனம் 540 மில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. மேலும் இது 1 பில்லியன் டாலர் அளவிற்கு நன்கொடைகளைத் திரட்டத் தவறியதால், 2020-ல் இந்நிறுவனம் capped-profit அடிப்படையிலான OPEN AI LAB  என்ற ஒரு துணை நிறுவனத்தை உருவாக்கியது. எனினும் இது போதுமான அளவு பயனளிக்கவில்லை.  

இந்த நிலையில்தான், இலவச பயனாளர்களுக்கு இந்த சேவையைப் பராமரிப்பதற்கான செலவு ஒரு நாளைக்கு 7 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது பொருளாதார ரீதியாக Open AI நிறுவனத்தை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
ChatGPT
GPT-3.5 மற்றும் GPT-4 போன்ற மேம்பட்ட AI மாடல்களை வணிக மயமாக்குவதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், OpenAI நிறுவனத்தின் வருவாய் அதன் அடிப்படை செலவினங்களை கூட ஈடுசெய்ய போதுமானதாக இல்லை.

மேலும் ஆரம்பத்தில் பிரபலமடைந்தாலும், ஜூலை 2023-ல் ChatGPT பயனர்களின் எண்ணிக்கையில் 12% சரிவைச் சந்தித்தது, தரவுகளின் அடிப்படையில் பயனர் எண்ணிக்கை 1.7 பில்லியனில் இருந்து 1.5 பில்லியனாகக் குறைந்தது. குறைந்துவரும் இதன் பயனர்களின் எண்ணிக்கை நிலைமையை மிகவும் மோசமாக மாற்றியுள்ளது.

இதுமட்டுமின்றி, மேம்பட்ட AI மாடல்களை உருவாக்கத் தேவையான Graphics processing unit-களின் பற்றாக்குறையால் OpenAI-ன் நிலைமை மேலும் சிக்கலாகியிருக்கிறது. இந்த வளங்களின் பற்றாக்குறை, புதிய மாடல்களைத் திறம்பட மேம்படுத்துவதற்கும், அவற்றைச் செயல்படுத்தத் தேவையான நிறுவனத்தின் திறனையும் குறைக்கிறது. மேலும் அதன் முதன்மை அடையாளமான ChatGPT-ன் தரத்தைப் பாதிக்கிறது.

Chat GPT
குறைந்து வரும் பயனர்கள் மற்றும் API தொடர்பான தடைகளுக்கு மத்தியில், OpenAI நிறுவனம் நிலையான வருவாயை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் எதிர்காலமானது, இந்தப் பலதரப்பட்ட சவால்களை விரைவாகவும் திறம்படவும் எதிர்கொள்ளும் அதன் திறனைப் பொறுத்தே அமையும் என எதிர்பார்க்கலாம்.


from விகடன்

No comments