Internet Archive: தூக்கப்பட்ட ஐந்து லட்சம் புத்தகங்கள் - தொடரும் சட்டப் போராட்டம்! முடிவு என்ன?
பழைய புத்தகங்களை டிஜிட்டலாக்குவதோடு இன்னபிற மல்டிமீடியா தகவல்களையும் சேமித்து வாசகர்களுக்கு இலவசமாகப் பகிர்ந்து வரும் டிஜிட்டல் நூலகமே இன்டர்நெட் ஆர்க்கைவ். 2020-ம் ஆண்டு ஹச்செட், ஹார்பர்காலின்ஸ், விலே மற்றும் பென்குயின் ரேண்டம் ஹவுஸ் ஆகிய பாரம்பரிய பதிப்பகங்கள் இன்டர்நெட் ஆர்க்கைவ் மீது வழக்கு தொடர்ந்தன. இதன் விளைவாக, இந்நிறுவனம் 5 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை தங்கள் தளத்திலிருந்து நீக்க வேண்டிய சட்டப் போராட்டத்தில் சிக்கியது. நான்கு வருடப் போராட்டத்தின் மத்தியில் 5 லட்சம் புத்தகங்கள் அதிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன.
‘Internet Archive’ அமைப்பு காப்புரிமை இல்லாத கிளாசிக் எழுத்துகளை டிஜிட்டலில் சேகரித்து, இலவசமாக வாசகர்களுக்கு இணையத்தில் வழங்கியது. நூலகம் எப்படிச் செயல்படுகிறதோ அதை டிஜிட்டலில் செய்தது. இதில் சுமார் 38 மில்லியன் புத்தகங்கள், 15 மில்லியன் ஆடியோ பதிவுகள் மற்றும் 9.8 மில்லியன் வீடியோக்கள் பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுவருகின்றன. உலக நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தனிப்பட்ட பங்களிப்பாளர்கள் ஆகியோரிடம் பெறப்பட்ட அரிய தகவல்களை இங்கே அணுகலாம்.
உலகின் பல்வேறு இடங்களில் நூலகங்கள் மூடப்படும்போது, அதன் அரிய நூல்களை Internet Archive வாங்கி சேமித்து வைத்திருக்கிறது. இது கிட்டத்தட்ட நிகழ் உலகில் ஒரு நூலகம் எப்படிச் செயல்படுகிறதோ அதை டிஜிட்டல் உலகில் செயல்படுத்துகிறது. இதன் மற்றொரு மிக முக்கியமான பங்களிப்பு, அதன் Wayback Machine. அது உலகளாவிய இணையதளங்களின் டிஜிட்டல் அருங்காட்சியகம் எனச் சொல்லலாம். ஓர் அருங்காட்சியகம் எப்படிக் கைவிடப்பட்ட பழைய பொருள்களைப் பாதுகாக்கிறதோ, அதுபோல கைவிடப்பட்ட பழைய இணையதளங்களைக் காக்கிறது Internet Archive. இது தற்போது இணையத்தில் இல்லாத இணையதளங்களை அணுகுவதற்கு உதவுகிறது. இப்படி இதுவரை 806 பில்லியன் வலைப்பக்கங்களைக் காப்பாற்றி வைத்திருக்கிறது.
அப்படிப்பட்ட டிஜிட்டல் நூலகம் இழுத்து மூடப்படுகிற சட்டச் சிக்கலை 2020-ம் ஆண்டு சந்தித்தது. அதாவது வாசகர் ஒரு நேரத்தில் ஒரு புத்தகத்தை மட்டுமே இணையத்தில் படிக்கும் Controlled Digital Lending திட்டத்தைத்தான் ‘Internet Archive’ பயன்படுத்தி வந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு சமயத்தில் பள்ளி, கல்லூரி, நூலகங்கள் என அனைத்தும் மூடப்பட்ட சமயத்தில், அதை மாற்றி எப்போது வேண்டுமானாலும் எத்தனை பேர் வேண்டுமானாலும் புத்தகத்தைப் படித்துக்கொள்ள வசதியாக ‘National Emergency Library’ என்ற 'Open Access' திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதுவே அதன் மீது பெரும் பதிப்பக நிறுவனங்கள் வழக்குப் போடக் காரணமாக அமைந்தது. வழக்குப் போடப்பட்ட உடனே அந்த திட்டத்தை ‘Internet Archive’ திரும்பப்பெற்றாலும், இன்று வரை அதற்கான சட்ட போராட்டத்தை எதிர்கொள்கிறது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வந்த தீர்ப்பின் காரணமாக 5 லட்சம் புத்தகங்களும் நீக்கப்பட்டிருக்கின்றன.
இதுகுறித்து பேசியுள்ள ‘Internet Archive’ தரப்பு வழக்கறிஞர்கள், "எங்கள் நிலைப்பாடு நேரடியானது. மற்ற கட்டட நூலகங்களைப் போலவே, எங்கள் டிஜிட்டல் நூலகப் புத்தகங்களைக் கடன் வாங்கி படிக்க அனுமதிக்க விரும்புகிறோம்" என்கிறார்கள்.
அதே போலக் கிட்டத்தட்ட 20,000 ஆதரவாளர்கள் ‘Internet Archive’க்கு ஆதரவாக வெளிப்படையான கடிதத்தை எழுதி புத்தக பதிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ளனர். இழந்த புத்தகங்களை மீண்டும் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அந்தக் கடிதம் கல்வியாளர்கள், மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோரை இது எவ்வாறு பாதிக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், கிராமப்புற சமூகங்கள், உள்ளூர் நூலகம் இல்லாதவர்கள் அல்லது பொதுவில் தங்களுக்குத் தேவையான தகவல்களை அணுக வசதி இல்லாதவர்கள் எவ்வாறு கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அது சுட்டிக்காட்டுகிறது.
"டிஜிட்டல் நூலகம் என்பது ஏமாற்று வேலை, எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்கள் உரிமையில்லாமல் நகலெடுத்து ஒரு தளத்தில் வெளியிடுவது ஏமாற்று வேலை" எனப் பெரும் பதிப்பகங்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருக்கின்றன.
அதே நேரத்தில், "எந்த அறிவுப் பொக்கிஷமும் ஒரே இடத்தில் தேங்கிவிடக்கூடாது. அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயக சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அறிவை அணுகுவதை எளிதாக்க வேண்டும். இது அனைவரையும் சமமான குடிமக்களாக மாற்றும்' என்று ‘Internet Archive’ நிறுவனர் தொடர்ந்து பல பேட்டியையும் அளித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஈ-புத்தகம் பற்றிய போதிய விழிப்புணர்வின்மையும் இதற்கான காரணம் என்கிறார்.
from விகடன்
No comments