Pakistan: பாகிஸ்தானில் 6 நாட்களுக்குச் சமூக வலைத்தளங்களுக்குத் தடை! - காரணம் என்ன?
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆறு நாட்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானில் வரும் 17ம் தேதி மொஹரம் பண்டிகைக் கொண்டாடப்பட இருக்கிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் வரும் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் தலைமையிலான அரசு இதனை அறிவித்துள்ளது.
இது தொடர்பான பரிந்துரையை அந்நாட்டில் மத்தியில் உள்ள ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசிடம் முன் வைக்கப்பட்டுள்ளது. "வன்முறையைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக வெறுப்பு பேச்சு மற்றும் தவறான கருத்துகள், தகவல்கள் பகிரப்படுவது தடுக்கப்படும்." எனப் பஞ்சாப் மாகாண அரசு தெரிவித்திருக்கிறது.
இதனை வியாழக்கிழமை இரவு பஞ்சாப் மாகாண அரசு அறிவித்தது. சுமார் 12 கோடி மக்கள் இந்த மாகாணத்தில் வசித்து வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் யூடியூப், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் உள்ளிட்ட தளங்களை ஆறு நாட்களுக்குத் தடை செய்யப்பட இருக்கிறது.
பாகிஸ்தான் பொதுத்தேர்தலின் போது, தேர்தல் முடிவுகளைச் சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பிரபல சமூக வலைத்தளமான 'எக்ஸ்' வலைதளத்திற்கு அந்நாட்டு அரசு கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடை விதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
from விகடன்
No comments