Breaking News

Google Doppl: 'போட்டோ இருந்தாலே போதும்' - ஆடையை ட்ரையல் பார்க்கும் கூகுள் AI செயலி!

சோசியல் மீடியாவில் செலிபிரிட்டிஸ் அணியும் ஆடைகள் நமக்கு போட்டால் எப்படி இருக்கும்னு யோசித்து உடனே ஆர்டர் போடுகிறோம். ஆனால் வீட்டுக்கு வந்ததும் அந்த டிரஸ் செலிபிரிட்டிக்கு நல்லா இருந்து, நமக்கு ஒரு வேலை செட் ஆகாம போயிடுச்சுன்னா என்ன செய்வது...? 

அதுக்குத்தான் ஆடையை நேரில் ட்ரையல் பார்க்காமலேயே நமக்கு போட்டால் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் இந்த 'Google Doppl' செயலி அறிமுகமாகியிருக்கு.

Google Doppl

'Google Doppl' என்றால் என்ன..?

நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கும் ஆடையை புகைப்படம் எடுத்தோ அல்லது மாடல்கள் அணிந்திருக்கும் ஆடைகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்தோ கூகுள் டோப்பல் செயலியில் பதிவேற்றம் செய்தால் மட்டும் போதும். பின்பு அந்த ஆடையை நீங்கள் அணிந்தால் எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக பார்க்கலாம். 

இந்த 'Google Doppl' செயலியை சோதனை செய்வதற்காக முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் பயன்படுத்தும் வகையில் கூகுள் இதை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஆம்! 'டோப்பல், ஏ.ஐ உதவியுடன் உங்கள் தோற்றம் புதிய புதிய ஆடைகளுடன் எப்படி இருக்கும் என்பதை ஸ்மார்ட் போனிலேயே காட்டுகிறது.

உங்களின் புகைப்படங்களை கூட வீடியோவாக மாற்றி, ஆடைகளைத் தேர்வு செய்ய மேலும் ஒரு சிறந்த அனுபவத்தையும் தருகிறது. பயனர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு ஆடை புகைப்படத்தை பதிவேற்றுவது மட்டுமே.. மீதியை டோப்பல் செய்து விடுகிறது.

Google Doppl

எப்படி இருக்கிறது இந்த 'Google Doppl'?

முதலில் கூகுள் டோப்பலை பதிவிறக்கம் செய்கிறார்கள். அதில்  தங்களின் கூகுள் அக்கவுண்டை வைத்து லாகின் செய்து கொள்கிறார்கள். பின்பு அவர்களின் உடலின் வகை, அளவு மற்றும் அவர்களின் விருப்பத் தேர்வுகள் உட்பட அவர்கள் கேட்கும் விவரங்களை வழக்கம்போல கொடுத்துவிடுவதாக இருக்கிறது.

இந்த விவரஙகளை வைத்து முதலில் அனிமேஷனாக உங்களின் அவதார் (avatar) உருவத்தை உருவாக்கிவிடுகிறது. பின்பு அவர்கள் விரும்பும் ஆடைகளை தேர்ந்தெடுத்து அதன் புகைப்படத்தை அப்லோட் செய்தால் போதும். அது அவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை வெவ்வேறு கோணத்தில் காட்சிப்படுத்துகிறது. 

ஏன் அமெரிக்காவில் மட்டும்..?

கூகுள் லேப்ஸ் (Labs) இன் ஒரு பகுதியாகவும் புது முயற்சியாகவும் இருக்கக்கூடிய இந்த செயலி,  கூகுள் ஷாப்பிங்கில் ஏற்கனவே உள்ள 'virtual try-on' தொழில்நுட்பத்தின் அடிப்படையில்  உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் டோப்பல் ஒரு சோதனை திட்டம் என்பதால் அமெரிக்காவில் மட்டுமே தற்போது பயன்படுத்தமுடியும்  வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Google Doppl

இந்தச் சோதனை மூலம் இதன் செயல்திறனை சரிபார்த்து வருகிறார்கள். ஆடையை டிரையல் பார்க்காமலேயே நமக்கு போட்டால் எப்படி இருக்கும் என்ற உணர்வைத் தரும் இந்த செயலி, எதிர்காலத்தில் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கூகுள் இதுவரை வெளியிடவில்லை.

இந்த ஐடியா ஃபேஷன் ஸ்டைல், ஷாப்பிங் உலகில் பெரும் வரவேற்பைப் பெறும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.



from விகடன்

No comments