Microsoft Outage: ப்ளூ ஸ்கீரின் பிரச்னை; விமானநிலையம், வங்கி, ஐடி நிறுவனங்கள் தவிப்பு; காரணம் என்ன?
உலகம் முழுவதும் 1.5 பில்லியன்களுக்கும் மேலான பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் `மைக்ரோசாஃப்ட்' மென்பொருள் (OS) திடீரென முடங்கிப் போனது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நேற்று ஜூன் 18ம் தேதி மாலை 6 மணி முதல் மத்திய அமெரிக்காவில் இந்தப் பிரச்னை ஆரம்பமாகியிருக்கிறது. திடீரென மைக்ரோசாஃப்ட் திரையில் ப்ளூ ஸ்கீரின் தோன்றி கணினி இயங்காமல் அப்படியே நின்றுள்ளது. இதனால் அங்கிருக்கும் நிறுவனங்களின் கணினிகள் முடங்கியுள்ளன. இந்தப் பிரச்னை இன்று அமெரிக்காவின் மொத்தப் பகுதிகளிலும் பரவி இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி எனப் பல நாடுகளில் இருக்கும் 'மைக்ரோசாஃப்ட்' ஓஎஸ் கணினிகளைப் பாதித்துள்ளது.
இதனால் 'மைக்ரோசாஃப்ட்' ஓஎஸ் கணினிகளைப் பிரதானமாகப் பயன்படுத்தும் பல ஐடி நிறுவனங்கள், வங்கிகள், மீடியா மற்றும் பொதுச் சேவை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் செக்கிங், விமானத்தைக் கண்காணிக்கும் சேவைகள் உள்ளிட்டவை பாதிப்படைந்துள்ளதால் விமானச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சில விமானச் சேவைகளில் பாதிப்பில்லை என்றாலும் கணினி செயல்படாததால் அங்கிருக்கும் விமான நிலைய அலுவலர்களே கைகளால் அனைத்தையும் எழுதி போர்டிங் விவரங்களை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் சிக்கல்களும், தாமதங்களும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் முக்கியப் பணிகளுக்கு விமானத்தில் செல்லும் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர். அதேபோல வங்கிகளிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த திடீர் 'மைக்ரோசாஃப்ட்' ப்ளூ ஸ்கீரின் பிரச்னை குறித்த தெளிவான காரணம் ஏதும் இன்னும் கண்டறியப்படவில்லை. அமெரிக்காவின் 'CrowdStrike' என்ற சைபர் செக்யூரிட்டி மென்பொருள் தொடர்பான அப்டேட் ஒன்றினால் இது நிகழ்ந்திருக்கலாம் என்கின்றனர். அதனாலேயே சிஸ்டம் பூட் ஆகாமல் மீண்டும் மீண்டும் ரீ-ஸ்டார்ட் ஆகின்றது என்று தெரிவிக்கின்றனர். இந்த அப்டேட்டை மேற்கொள்ளாதவர்களுக்கு எந்தச் சிக்கலும் நிகழவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அந்த நிறுவனம் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறது. இப்போதைக்குத் தற்காலிகத் தீர்வாக மிகுந்த கவனத்துடன் DATA-களுக்கு சேதாரமின்றி கணினியை 'Boot' செய்யச் சொல்லி வலியுறுத்துகிறது அந்நிறுவனம். அப்படியும் இதே பிரச்னை நேர்ந்தால் இந்தப் பிரச்னை சரிசெய்யப்படும் வரை கணினியை ஆஃப் செய்து வைத்திருக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
இது சைபர் தாக்குதலாக இருக்கும் என்று அமெரிக்க அரசு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. அமெரிக்க அரசின் முக்கியமான துறையைச் சேர்ந்த கணினிகள் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
from விகடன்
No comments