Breaking News

சுந்தர் பிச்சையின் மாஸ்டர் பிளான்; இந்தியாவில் ₹1.25 லட்சம் கோடியில் 'Google AI Hub' - என்ன ஸ்பெஷல்?

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பு, இந்திய ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், H1B விசா சிக்கல்கள், அமெரிக்க டெக் நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் அமெரிக்கர்களே இருக்க வேண்டும் என்ற பேச்சுகள் உலக நாடுகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன.

கூகுள் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சத்ய நாதெல்லா, யூடியூப் நீல் மோகன், Adobe ஷாந்தனு நாராயண் என பலரும் இந்தியர்களே. இப்படியிருக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகள், பேச்சுகள், கொள்கை முடிவுகள் எல்லாம் இந்தியர்களுக்கு எதிராக இருந்து வருகின்றன.

AI hub data centre
AI hub data centre

இந்தச் சூழலில் இந்தியா, வெளிநாடுகளை நம்பியிருக்காமல், நம் நாட்டிலேயே தொழில்நுட்ப வளர்ச்சிகளைக் கொண்டு வரும் தொலை நோக்குப் பார்வையில் முன்னேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்ற இந்தியாவாக உருவாக வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

இதனைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும், இந்திய தொழில்நுட்பங்களையே இந்தியர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது இந்தியா. உலகளவில் டெக் ஜாம்பவான்களாக  இருக்கும் இந்தியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த அடிப்படையில்தான் சமீபத்தில் ZOHO-வின் 'அரட்டை', 'zohomail' உள்ளிட்ட தொழில்நுட்பங்களுக்கு இந்திய அரசு ஆதரவளித்து வருகிறது.

இப்போது கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அடுத்த கட்ட பாய்ச்சலாக, கூகுளின் 'Google AI hub data centre'ஐ ஆந்திர மாநில விசாகப்பட்டினத்தில் பெரிய அளவில் கட்டமைக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

இதற்கு இந்திய அரசிடம் அனுமதி கேட்டுப் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், இப்போது சுந்தர் பிச்சை, பிரதமர் மோடியிடம் இதுகுறித்து திட்டங்களை விவரித்திருக்கிறார். இதையடுத்து மத்திய அரசும் இதை வரவேற்று அனுமதி வழங்கியிருக்கிறது.

இந்திய தொழில்நுட்ப வளர்ச்சியில் இது மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என்றும் இதன் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் உறுதியளிக்கிறார் சுந்தர் பிச்சை.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் கூகுள், பல்வேறு நாடுகளில் தங்களின் 'AI hub data centre'களை அமைத்திருக்கிறது. அந்தந்த நாட்டு இணைய தகவல்களை அந்தந்த நாட்டிலேயே பராமரிக்கவும், வேகமாக செயல்படவும் இப்படியான 'AI hub data centre'கள் பல்வேறு நாடுகளில் விரிவு படுத்தப்படுகின்றன.

 Google AI hub, அமெரிக்கா
Google AI hub, அமெரிக்கா
கம்ப்யூட்டருக்கு எப்படி 'CPU' எல்லா தகவல்களையும் சேகரிக்கவும், இயங்கவும் இதயமாக இருக்கிறதோ, அப்படித்தான் மொத்த கூகுள் இணையதளம் செயல்பட, தகவல்கள் சேமித்து வைக்கும் இதயமாக இருக்கிறது ஆயிரக்கணக்கான 'TPU' சிப்களைக் கொண்ட இந்த 'Ai hub data centre'.

இதில்தான் கூகுளின் மொத்த தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன. நாம் இணையதளத்தில் தேடும் தகவல்கள் எல்லாம் இங்கிருந்துதான் நமக்குக் கிடைக்கும்.

பல்வேறு நாடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த 'Ai hub data centre' அனைத்தும் கடல் வழி ராட்சத கேபிள்கள், நிலத்தடி இராச்சத கேபிள்கள் மூலம் இணைப்படுகின்றன. இதை பராமரிக்க, இயங்க வைக்க பல நூறு தொழில்நுட்ப வல்லுநர்கள், டெக் ஊழியர்கள் பணியாற்ற வேண்டியிருக்கும்.

இந்த 'Ai hub data centre'யைத்தான் மிகப்பெரிய அளவில் இந்தியாவில் அமைக்கிறது கூகுள். இந்திய அரசும் இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. கூடிய விரைவில் விசாகப்பட்டினத்தில் மிகப்பெரிய அளவில் 'Google Ai hub' உருவாகவிருக்கிறது.



from விகடன்

No comments